நகரமயமாக்கல் சூழலில் மேற்கத்திய கலாச்சர தாக்குதலால் சத்து மிகுந்த உணவு பொருட்கள் பயன்பாடு குறைந்தது. ஆனால் இப்போது உணவு பொருட்கள் மூலம் பெருகி வரும் நோய்களால் பண்டைய உணவு பொருட்களுக்கு ஏங்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
சமீபகாலமாக கம்பு, ராகி போன்ற தமிழர்களின் பண்டைய சிறு தானியங்களை பயன்படுத்துவது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது.
சிறு தானியங்களில் பல வகைகள் இருந்தாலும் சோளம் முதன்மையான உணவு பொருளாக கருதப்படுகிறது.
சோள உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சோளம் பயிரிடப்படுகிறது.
சோளத்தில் ரொட்டி, கஞ்சி, கூழ், சாதம் போன்றவை மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த நிலை மாறி தற்போது, இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோளப் பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை, சமோசா உள்ளிட்ட பல உணவு வகைகள் தயாரித்து பயன்படுத்தலாம்.
தற்போது சோள தானியங்களுக்கு நகர்ப்புறங்களில் அதிக கிராக்கி ஏற்பட்டு வருகிறது. மழை வளம் குறைந்து வரும் சூழலில், குறைந்த நீர் தேவையுள்ள சோளப் பயிர்களை விவசாயிகள் உற்பத்தி செய்வது மூலம் நல்ல லாபத்தையும் ஈட்ட முடியும்.
சோளத்தில் அதிகளவு மாவுச் சத்து, நார்ச் சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது.
குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம்.
கோதுமையில் உள்ள புரதத்தைவிட சோளத்தில் உள்ள புரதம் சிறப்பு வாய்ந்தது. பட்டை தீட்டப்படாத சோளத்தில் நார்ச் சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது.
நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டதால் இன்சுலின் சாரா நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.
சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. கண் குறைபாடுகளை சீர் செய்யும். ‘பீட்டா கரோட்டின்’ இதில் அதிகமாக உள்ளது.
எனவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்!