எனது கொடிவழி

                              முன்னவர் வேர்களைப் பற்றியது.

வாழையடி வாழையென வாழ்கவென பெரியவர்கள் வாழ்த்துரை வழங்குவார்கள். அதன் உள்அர்த்தங்களை அறிந்து கொள்ளும் முனைப்பின்றி கடந்து செல்பவர்களே அநேகம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தலைமுறைகளின் வரலாறு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நாகரீக உலகத்தின் அடையாளம் என்று பெற்ற தாய், தந்தையை கூட ஒதுக்கிவிட்டு தனிக்குடித்தனமாக வாழத் துவங்கிவிட்ட இன்றைய சூழலில் தலைமுறைகளின் வாழ்வியலும், அவர்களது கிளை உறவுகளும் தேவையற்ற சுமையாகிப் போனதில் வியப்பில்லை. குடும்ப விழாக்களுக்கு பெயர் போட்டு அச்சடித்து வரும் நிறைய பெரியவர்கள் தனது உறவுமுறை சொல்லி உங்க அய்யாவுக்கு தெரியும். உங்களுக்கு எங்க தெரியப்போகுது. வந்தா போனாத்தானே தெரியும் என நொந்து கொள்வார்கள். காரைக்குடி பகுதி செட்டியார்கள் ஒவ்வொரு குடும்பத்தினரும் பத்து பதினைந்து தலைமுறைப் பெயர்களைச் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள்.

நம்முடைய பேரனுக்கு பேரன் நம்மை அறிந்திருக்க மாட்டான் என்பது எவ்வளவு கொடுமையானதோ, அதற்கு இணையானது நாம் நமது முன்னோர்களை அறிந்திராமல் வாழ்வது. இன்றைய நாட்களில் ஒன்றிரண்டு தலைமுறை முன்னோர்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கும் நபர்கள் மிகக்குறைவே. எனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கிவிட்ட நிலையிலும், எனது சொந்த கிராமத்தினர் கணேசத்தேவர் பேரன் என்றுதான் சொல்ல விரும்புகிறார்கள். நீதிமன்றங்களிலே உரக்கச் சொல்வது போல நாகுத்தேவர் வகையறா என்றுதான் பேசுகிறார்கள். ஆக, நானென்பது நானல்ல இந்த வகையறாக்கள் தான் நான்! இவர்கள்தான் எனது ஆணிவேர். இவர்களது பழமையும், பெருமையும், குடும்ப முறைகளும் எனது குருதியிலே பதிந்து கிடக்கிறது.

“தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை” என்று தமிழில் பழமொழி உண்டு. இதனை தொல்காப்பியரும் பிள்ளை என்பவன் தந்தையின் மறு அச்சு என்கிறார். (தந்தையர் ஒப்பர் மக்கள்- தொல்-1092) ஆக தந்தையின் பிரதியாகிப் போன எனக்குள் தந்தையின் தந்தையென ஆயிரம் தலைமுறைகளின் வாசம் அடிக்கவே செய்கிறது. மறத்தமிழர் சேனை இயக்கத்தின் மாநில அமைப்பாளர் என்கிற முறையில் பல நேரங்களில் கலப்பு திருமணத்திற்கு எதிராக பதிவிட, பேச நேர்கின்ற பொழுதுகளில் அகநானூறும், புறநானூறும் போற்றிப் புகழ்ந்த இந்த சாதியின் பழைமையை சிதைக்க வரும் தேவர் சாதி தலைவர்கள் தங்களது சொந்த வரலாற்றை சொல்லிவிட்டு வாருங்கள் என்பேன். அவர்களின் சொந்த வரலாறு எனும் குடும்ப வரலாறு என்பது இன்றளவும் அவர்களால் சொல்ல முடியாததாகிவிட்டது. என்னுடைய கொடிவழியினையாவது யாவரும் அறிகிற வகையில் படையலிட வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசைகளோடு கொடி வழி முன்னவர்களையும், கிராமத்தையும், சமூகத்தையும் அதன் வரலாற்று பழமை மாறாமல் பாதுகாத்திடல் எமது கடமைகளில் ஒன்றாகிறது.


பண்டைத் தமிழ்ச் சான்றோர்கள் தங்களது வாழ்வியலை அகம் புறம் என இரண்டு பிரிவுகளாக வகுத்து, அக வாழ்வின் கூறுகளாக காமம், குடும்ப வாழ்வு, ஒருதலைக் காமம், இன்பம் ஆகியவற்றையும் புற வாழ்வின் கூறுகளாக ஆண்மை, வீரம், போர், வீரமரணம் ஆகியவற்றையும் பிரித்துள்ளனர். அதனைப்போலவே, நிலத்தையும் ஐவகையாகப் பிரித்து வைத்துள்ளனர். தொல்காப்பியர் காலத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களே கூறப்பட்டுள்ளன. பிறகு சிலப்பதிகாரத்தில் ஐந்தாவது நிலமான பாலை பிறக்கும் வகையை இளங்கோவடிகள் பதிவு செய்துள்ளார். 

       "முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து
        நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப்
        பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்"
        (சிலப். காடு. 64-66)


ஆக, பாலைக்கென்று தனியாக தமிழ்நிலத்தில் இடமில்லை. முல்லையும், குறிஞ்சியும் கதிரவன் வெயிலால் அதன் இயல்பை இழந்து, வளமையற்ற பகுதியாக கிடக்கையில் அது பாலை நிலமாக கருதப்பட்டுள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரிவையும், அதன் துயரத்தையும் பாலை நிலத்திற்குரியதாக்கியுள்ளனர். பாலையின் தெய்வமாக கொற்றவை யும், அங்கே வாழ்ந்த மக்கள் மறவர், மறத்தியர், எயினர், எயிற்றியர், காளை, விடலை எனவும் வகைப்படுத்தப்பட்டனர். 


மறம் என்கிற சொல்லுக்கு வீரம், கொலை என்றும், மறத்தொழில் என்பது கொலைத்தொழில் எனவும், மறவன் என்றால் கொலை செய்பவன், வீரன் என்றும் தமிழ் அகராதி அர்த்தம் தருகிறது. மறவர்கள் போர்த்தொழிலை அடிப்படையாகக் கொண்டவர்களாகவும், போர் என்றால் மிகுந்த மகிழ்ச்சி கொள்பவர்களாகவும், போர்க்களத்திற்குள் புகுந்துவிட்டால் யார் தடுத்தாலும் இடையில் நிறுத்துகிற வழக்கமற்றவர்களாகவும் இருந்ததாக சங்க நூல்கள் பதிவு செய்துள்ளன. மேலும், போரும் போர் நிமித்தமான வாழ்வும், போரில் உயிர் நீத்து நடுகல் ஆவதும் மிகுந்த கெளரவம் என கருதியுள்ளனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி என புறப்பொருள் வெண்பா மாலை என்கிற இலக்கண நூல் சான்று பகருகிறது. மறவர் என்கிற பெயர் முதலில் காரணப்பெயராகவும் பின்பு அகமண முறைகளால் இயற்பெயராகவும் உருவெடுத்து தென்தமிழகத்தில் பரவி வாழக்கூடிய முதன்மை சமூகத்தை அடையாளம் செய்து வருகிறது. 

உட்பகை ஒருதிறம் பட்டெனப், புட்பகைக்கு
ஏவான் ஆகலின், சாவோம் யாம் என,
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத், (புறம் 68.11-13)

விழுத்தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்  (அகநானூறு 53)


       உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
       செறினும் சீர்குன்றல் இலர். (குறள் : 778)

       போரெனிற் புகலும் புனைகழன் மறவர் (புறம் :31.9)

மறவர்களிலும் பல வகையினர் உண்டு. செம்பிய நாட்டு மறவர், கொண்டையன் கோட்டை மறவர், அஞ்சு கோட்டை மறவர், காரண மறவர், உப்புக்கோட்டை மறவர், காருகுறிச்சி மறவர், சிறுதாலி கட்டிய மறவர், பெரிய தாலி கட்டிய மறவர், பாசிகட்டி மறவர், கன்னிகட்டி மறவர், அணில் ஏறாக்கோட்டை மறவர் என பல வகையினர் தங்கள் வாழ்வியல், போர் முறை, வழிபாடு, இருப்பிட மண் சார்ந்து பலதரப்பட்ட பண்பாடுகளோடு அவரவர்களுக்குரிய அடையாளங்களோடு இன்றளவும் வாழ்ந்து வருகிறார்கள். 

இவர்களில், தென்பகுதியின் ஆட்சியாளர்களாக இருந்த செம்மநாட்டு மறவர் என்கிற சொல் வழக்கமுடைய செம்பிய நாட்டு மறவர்களுக்கு, செம்பியன் நாட்டு மறவர் என்கிற பெயருண்டு. செம்பியன் என்றால் சோழன் என்றும் பொருள் விளங்கும். செம்பிய மறவர்கள் சோழ நாட்டிலிருந்து படையெடுத்து பாண்டிய நாடு வந்தவர்கள் எனவும், அதன் காரணமாக சோழ நாட்டில் இருக்கின்ற பல கிராம பெயர்கள் இங்கேயும் இருக்கின்றன எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தனது பெயருக்கு பின்னே தேவர் என்கிற பட்டத்தை போட்டுக்கொள்ளும் வழக்கமுடையவர்கள் ஆவர். இராமநாதபுரம், சிவகங்கை அரசர்கள் செம்பியன் நாட்டு மறவர் சாதியினை சார்ந்தவர்கள் தான். இராமநாதபுரம் மன்னர்கள் சேதுபதி என்கிற பட்டத்தோடு மக்களாட்சி மலரும் வரை இந்த மண்ணை அரசாண்டடு வந்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நயினார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகைவென்றி கிராமம் தான் எனது பூர்வீக கிராமம். வைகை ஆற்றின் கரைமீது அமைந்திருக்கும் அற்புதமான கிராமம். வரலாறு நெடுக வாளும், வேலும் தாங்கிய மறவர்கள் போரிட்டு, குருதி வடிய வெற்றிக் களியாட்டம் ஆடிய மண் இது. எவர் பகை கொண்டு வந்தாலும் வென்றுவிடும் மறவர் கூட்டம் இராமநாதபுரம் சீமைக்கு ஊடாக ஓடிய வைகை ஆற்றுக்கு அக்கரையில் வாழ்ந்து வந்ததன் அடையாளமாக பகை வென்றி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பகைவென்று திறைகொண்ட (கலி:31)

பகைவென்றி கிராமத்தில் ஐம்பதாண்டுகளுக்கு முன்புவரை பார்ப்பனர்கள். செட்டியார்கள், ஆச்சாரிகள், மறவர்கள், அகமுடையார்கள், கோனார்கள், வெள்ளாளர்கள், நாவிதர்கள், வண்ணார்கள், பள்ளர்கள், பறையர்கள், சக்கிலியர்கள், கோலியர்கள் ஆகியோர்கள் தனித்தனி குடியிருப்புகளாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களில் செட்டியார்கள் இரண்டு வகையினராகவும், ஆச்சாரிகள் நகை செய்பவர்; ஏர் கலப்பை செய்பவர் என இரண்டு வகையினராகவும் இருந்து வந்துள்ளனர். தற்போது இவர்களில் ஐயர் எனப்பட்டவர்கள் பரமக்குடி, மதுரை, திருச்சி பகுதிகளில் பரவலாக குடியேறி விட்டனர். சொந்த கிராமத்தை விட்டு முற்றாக கிளம்பிவிட்ட இவர்கள் வருடத்திற்கு ஓருமுறை சிவராத்திரி வழிபாட்டிற்காக வருவதுண்டு. செட்டியார் மற்றும் ஆசாரி சாதியினர் பரமக்குடி பகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டனர். இவர்கள் எதற்காகவும் வருவதில்லை. வெள்ளாளர்களில் சரிபாதியினர் திருவாரூர் நகருக்கு சென்று விட்டது போக மீத சாதியினர் பகைவென்றி கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.


இந்த கிராமத்தின் அறுபதுகளை தாண்டிய முதியவர்களுக்கு நான் புதுமலர் பிரபாகரன் அல்ல. ஒன்று நாகுத்தேவர் வகையறா அல்லது கணேசத்தேவர் பேரன் அல்லது சுப்பிரமணி மகன் அவ்வளவே. பெண்களுக்கு நான் எப்போதும் பாக்கியவதி மகன் தான், அல்லது தோக்கனந்தா மகன்’. வாழ்க்கைப்பட்டு வந்த பெண்ணின் கிராமத்தையே, அந்த பெண்ணின் பெயராக மாற்றி அழைக்கும் கிராமத்தின் வெள்ளந்தி மனசு அழகானது மட்டுமல்ல அற்புதமானது. என் சக வயது நண்பர்களுக்கு மட்டும் நான் பிரவு அல்லது பிரபு’. சிலருக்கு பிரபாகரு ஆயினும் இவர்கள் எப்படி அழைத்தாலும் எனது மாற்றமில்லா அடையாளம் எனது முகத்திலும், பேச்சிலும், திமிரிலும், சாதியிலும் கலந்து கிடக்கிறது. இவைகள் என்னால் உருவாக்கப்பட்டவைகள் அல்ல. எனது இயல்பான வாழ்வை கடத்திச்செல்லுகிற இவையாவும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக எனது பரம்பரையினர் வழியாக என்னை வந்தடைந்துள்ளன. 


கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அறிவியல் தேடலில் கிடைத்த மிகப்பெரிய கண்டுபிடிப்பும், வியக்கத் தக்கதுமான ஆராய்ச்சி என்றால் அது மனித உடற்கூறின் அடிப்படை மரபு அணு (Genetic Code) பற்றியதுதான். நாம் கருவில் இருக்கும் போதே நமது பெற்றோர்களின் உடல் அமைப்பு, முக தோற்றம், குணங்கள், பரம்பரை நோய்களின் தாக்கம் போன்றவைகளை மரபணுக்கள் தான் கொண்டுவந்து சேர்க்கின்றன என்பதை அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதன் தொடர்ச்சியாகவே எனது நூற்றுக்கும் மேற்பட்ட தலைமுறைகளின் போர் வெறியானது போரற்ற இந்த காலத்திலும் களத்திலே மரணித்து நடுகல் ஆவதற்கு தூண்டுகிறது எனலாம். யாவரையும் போல இயல்பான வாழ்வை வாழ்ந்து கழித்திட ஆயிரம் வழிகள் இருந்தும் பிறந்த சாதிக்காக யாவற்றையும் துறந்து போராட சொல்கிறது. ஒவ்வொரு மனிதனின் பிறப்புக்கும் காரணமாகிடும் தாய், தந்தையின் பரம்பரை மரபுகள் ஆட்கொள்வதைப் போலவே, பிறந்து வளரும் மண்ணின் மாண்புகளும் நம்மை, நமது நகர்வுகளை தீர்மானிக்கிறது எனலாம்.

உலகில் மனிதன் முதலில் எங்கே தோன்றினான்? எல்லோரும் ஒரே தாய் தந்தையிடமிருந்து உருவாகி பிரிந்தவர்களா? என்பது குறித்த விவாதங்கள் ஒரு புறமிருக்க அவரவர் வாழும் மண்ணுக்குரிய குணங்களே அவர்களது செயல்களில் ததும்பி நிற்கின்றன என்பதும் ஏற்கவேண்டியவைகளே!. எனது தந்தை பிறந்த கிராமம் பகைவென்றி. எத்தகைய பகை வந்தாலும் வென்றுவிடுவார்கள் என்பதற்கான காரண பெயராக பகைவென்றி என பெயர் சூட்டப்பட்டதைப் போல, எனது தாயின் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், தோக்கானேந்தல் ஆகும். இதற்கு தோற்காத ஏந்தல் என பொருள் படும். பொதுவாக, பண்டைய தமிழகத்தில் வாழுமிடத்திற்கு காரண காரியங்களோடு பெயர்சூட்டி வந்திருக்கின்றனர். அதன்படி குடி, குளம், கோட்டை, கரணை, கண்மாய், நாடு, புரம், பட்டி, பட்டினம், பாளையம், ஊர், ஊரணி, ஏரி, ஏந்தல், தாங்கல், ஓடை, பேட்டை, வலசை என பெரும்பாலும் நீர்நிலைகளையே அடிப்படையாக வைத்து அழகு சேர்த்துள்ளனர். அதன்படி எவரிடமும் தோற்றுவிடாத வீரம் பொருந்திய மக்கள் வாழ்ந்த கிராமத்திற்கு ஏந்தலை பின்னொட்டாக வைத்து தோக்கானேந்தல் எனவும், பகை வென்று கொடி நாட்டும் மக்களின் கிராமத்திற்கு பகைவென்றி எனவும் பெயர் அமைந்திருக்கிறது.

பகைவென்றி, தோக்கானேந்தல் ஆகிய இரு ஊர் மண் சார்ந்த பெற்றோருக்கு பிள்ளையெனப் பிறத்தல் இயல்பானதல்ல, எளிதானதுமல்ல. இவைகள் எதேச்சையாக நிகழ்வது போல நிகழும் வரலாற்றுச் சம்பவங்கள் என மதுரை ஆதீனம் அவர்கள் சொல்லும் வரை நானே சிந்திக்க மறந்த மண் வாசனை இது. “ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாட்களிலும், ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை” என இலக்கியங்கள் புகழும் வைகை ஆற்றின் சிறப்பியல்புகள் பற்றி பேசப்பேச நா இனிக்கும். வைகை ஏன் கடலில் கலப்பது இல்லை என்கிற விவாதம் தக்கையாக பரணி இயற்றிய பெரும்புலவர் ஒட்டக்கூத்தருக்கும் நளவெண்பா எழுதிய புலவர் புகழேந்திக்கும் நடைபெற்றபோது சிவனுக்கு நஞ்சளித்த இந்த கடலோடு சேர சிவனிடம் பக்தி கொண்ட வைகை நதி விரும்பவில்லை என்பதாக புகழேந்தி புகழ்கிறார்.

        நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
        வாரியிடம் புகுதா வைகையே மாறி
        இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
        நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.

ஆற்று நீருக்கே தான் கொண்ட பக்தியின் காரணமாக கடலோடு கலந்து மறையும் இயல்பை மறுக்கும் உணர்வு அமைந்துவிடுகிற போது, அந்த ஆற்றுநீர் பருகி வாழ்ந்த மூதாதையர்களின் மன ஓட்டம் எப்படியானதாக இருந்திருக்கும். நம்பிக்கை கொன்றுவிடாத மக்களைப்போலவே வைகையும் இருந்திருக்கிறது.

        புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
        வையை என்னும் பொய்யாக் குலக்கொடி (சிலம்பு : புறஞ்சேரி 13.170) 


   
வைகை கரை மீதிருக்கும் பகைவென்றி கிராமத்தின் நா.மு.செள.நா.க.சு.பிரபாகரன் என்பதுதான் எனது அடையாளம். கொடிவழி முன்னவர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலை சிவராத்திரி இரவுகள் தந்து கொண்டிருந்ததன் விளைவாக உறவுகளின் நெருக்கத்தை துளியும் விரும்பாத எனது தாத்தாவிடம் பதினைந்து வருடங்களுக்கு முன்பாகவே கேட்கத் துவங்கினோம். எங்கள் கிராமத்தின் மொத்த மறவர் குடிகளுமே மூன்று குடும்பங்களின் கிளைகள் தான். அவர்களிலும் எங்களைத் தவிர்த்த இரண்டு வகையறாக்களும் நூறாண்டுகளுக்குள் குடியேறியவர்களாக இருக்கிறார்கள். இன்று பல வகையானவர்கள் இருந்தாலும். அவர்கள் திருமணத்திற்குப் பிறகு பெண்வழி சொத்தாள வந்தவர்களேயாவர். குறிப்பாக சிலர், தந்தையின் மரணத்திற்குப் பிறகு நிகழும் கைம்பெண் குடியேற்றம் காரணமாக தாயூர் வந்தவர்களாவர். பல தலைமுறைகள் மாறும்போது அவர்களுக்கு அதுவே சொந்த ஊராக மாறி நிற்கும், அவர்களது பூர்வீக கிராமத்தின் தொடர்பற்றவர்களாக மாறியிருப்பார்கள். அப்படிதான் பல குடும்பங்களின் ஆணிவேர் புலப்படத் தொடங்கியது.   

எங்களது குடும்பமும் கூட நயினார்கோவில் அருகிலுள்ள வலசை கிராமத்திலிருந்து காவலுக்காக அழைத்து வரப்பட்டதாகும். அடிப்படையில் இந்த கிராமம் செட்டியார்களும், பார்ப்பனர்களும் மிகுதியாக வாழ்ந்த கிராமமாக இருந்திருக்கிறது. இன்று அவர்களது சுவடுகளே இல்லாமல் போனது வேறு கதை. ஆயினும், மறவர்களின் முதல் குடியேற்றமாக எனது தலைமுறையினர் காவல் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களிலே எனது மகனது பெயரின் முன்னொட்டாக வருகிற தலைமுறைகளின் முதல் எழுத்தானது நா.மு.செள.நா.க.சு.பி.அருண் மொழித்தேவன் என வருகின்ற நிலையில், இதுவே அவனது கொடி வழி ஆகும். நாகலிங்கத்தேவர் மகன் முத்து தேவர் மகன் செளந்தரபாண்டித் தேவர் மகன் நாகுத்தேவர் மகன் கணேசத்தேவர் மகன் சுப்பிரமணியன் மகன் பிரபாகரன் மகன் அருண்மொழித் தேவன் இவ்வளவுதான் தற்போது சொல்ல முடிகிறது. அதாவது எட்டு தலைமுறைகள். இந்த உறுதி செய்யப்பட்ட தலைமுறைகளில் நாகலிங்கத்தேவரின் மூதாதையர்களின் பெயர்களையும் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளை இராமநாதபுரம் மாவட்ட அரசு இதழ் மற்றும் ஆவண காப்பக பதிவுகளிலும், நில பதிவு மூலங்களிலும் மேற்கொள்ள இருக்கிறேன். 


எனது குடும்பம் : புதுமலர் பிரபாகரன்

பகைவென்றி நா.மு.செள.நா.கணேசத்தேவர் அவர்களுக்கும் – கீழாய்க்குடி கருப்பையாத்தேவர் அவர்களது மகள் குருவம்மாள் கருப்புத்ரா கிளை (கருபுத்திரன் கிளை) அவர்களுக்கும் ஊர் கிராம பொதுமக்கள், உறவினர்கள் முன்னிலையில் ஏற்படுத்தப்பட்ட திருமண உறவுவின் காரணமாக, இருவரும் ஒரு குடும்பம் ஆகினர். இவர்களது நிறைவான வாழ்வின் அடையாளமாக மீனம்பாள், சுப்பிரமணியன், பாண்டியன், முருகேசன், வைரம்பாள், நாகலிங்கம் ஆகிய ஆறு பிள்ளைகள் பிறந்தனர். இவர்கள் அனைவருக்கும் தாய் வழி கிளையான கருபுத்ரா கிளை தான் ஆணிவேர். இவர்களது குல தெய்வம் பகைவென்றி கிராம வயல்திடலில் அமைந்திருக்கும் ஸ்ரீ கால பைரவர் ஆகும். ஆண்டுதோறும் மகாசிவராத்திரி அன்று வெகு விமரிசையாக குலதெய்வ வழிபாடு நடக்கும். மறவர் சாதியினரும் ஐயர் சாதியினரும் மட்டுமே வழிபாடு செய்வது வியப்புக்குரியது. அசைவ விருந்துகள் மற்றும் பலியிடல் நடப்பதில்லை. காது குத்தல், தலைமுடி காணிக்கை ஆகியவற்றோடு சைவ விருந்து உண்டு. இவை குறித்தே பெரிய ஆய்வுகள் தேவை.

மீனம்பாள் அவர்களுக்கு பகைவென்றி கிராமத்தை சார்ந்த க.செல்வராஜ் என்பவரையும், சுப்பிரமணியன் (எனது தந்தை) அவர்களுக்கு தோக்கானேந்தல் கிராமத்தை சார்ந்த பாக்கியவதி என்பவரையும், பாண்டியன் அவர்களுக்கு நென்மேனி கிராமத்தை சார்ந்த அமுதவள்ளி நாச்சியார் என்பவரையும், முருகேசன் அவர்களுக்கு பாம்பூர் கிராமத்தை சார்ந்த சாமுண்டீஸ்வரி என்பவரையும், வைரம்பாள் அவர்களுக்கு வ.அண்டக்குடி கிராமத்தை சார்ந்த சா.போஸ் என்பவரையும், நாகலிங்கம் அவர்களுக்கு கீழாய்க்குடி கிராமத்தை சார்ந்த பஞ்சவர்ணம் என்பவரையும் உறவினர்கள் சூழ திருமணம் செய்து வைத்தனர். இவர்களில் எவரும் மறவர் அல்லாத சதியினரோ, காதல் மணம் புரிந்தவர்களோ இல்லை.

இவர்களில் பாக்கியவதி தோக்கானேந்தல் வ.மலைராஜ் தேவர் – செல்லம்மாள் ஆகியோர்களுக்கும், அமுதவள்ளி நாச்சியார் நென்மேனி கு.கருப்பையாத்தேவர் – மீனா ஆகியோர்களுக்கும், சாமுண்டீஸ்வரி பாம்பூர் ராமமூர்த்தி – திலகவதி ஆகியோர்களுக்கும், பஞ்சவர்ணம் கீழாய்க்குடி க.துரைசிங்கம் – லெட்சுமி அம்மாள் ஆகியோர்களுக்கும் மகள்களாக பிறந்தவர்கள் ஆவர்.

சுப்பிரமணியன் – பாக்கியவதி மரிக்கா கிளை (மரிக்காதார் கிளை. மரணம் அற்றவன்) தம்பதியினருக்கு புதுமலர் பிரபாகரன் (நான்), சுரேஷ், புதுமலர் ராஜா தேவன், சுமன் ஆகிய நான்கு பிள்ளைகளில் சுரேஷ் இளமையிலேயே இறந்துவிட, மூன்று பிள்ளைகள் இருக்கிறோம். எனக்கு தோக்கானேந்தல் கிராமத்தை சார்ந்த வ.அ.தங்கராஜ் – மாரியம்மாள் ஆகியோர்களின் மகள் சாந்தினி நாச்சியாரோடு சீத்ரமா கிளை (சீற்றமன் கிளை) பெரியோர்கள் சூழ திருமணம் நடைபெற்றது. தற்போது, தேவி வைஷ்ணவி நாச்சியார், அருண் மொழித்தேவன் ஆகிய இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

பாண்டியன் – அமுதவள்ளி மரிக்கா கிளை (மரிக்காதார் கிளை. மரணம் அற்றவன்) தம்பதியினருக்கு வைதேகி, குணசீலன் ஆகிய இரண்டு பிள்ளைகளில் வைதேகி, கீழப்பண்ணைக்குளம் கிராமத்தை சார்ந்த தங்கச்சாமி – பாப்பா ஆகியோர்களின் மகன் த.பூப்பாண்டி பிச்சா கிளை என்பவருக்கு மணமுடித்து வைக்கப்பட்டு, தற்போது ஷஸ்வந்த் கணேஷ், எழிலரசன் ஆகிய இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்

முருகேசன் – சாமுண்டீஸ்வரி  மரிக்கா கிளை (மரிக்காதார் கிளை. மரணம் அற்றவன்) தம்பதியினருக்கு கோபிநாத், தினேஷ் பாபு, கீர்த்திகா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

நாகலிங்கம் – பஞ்சவர்ணம் பிச்சா கிளை (பிச்சையன் கிளை) தம்பதியினருக்கு சங்கீதா, வைத்தீஸ்வரன் ஆகிய இரண்டு பிள்ளைகளில் சங்கீதா, வே.உலகநாதபுரம் இ.மலைராஜ் – வள்ளி ஆகியோர்களின் மகன் சுரேஷ்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.
















                                                                                          கொடி வழி இன்னும் படரும்......



2 comments:

  1. அருமை அண்ணா...

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே நாங்கள் பழனி அருகே உள்ள சிந்தலவாடம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் குலதெய்வம் மாரியம்மன் கருப்பசாமி என்றும் ஏழாயிரம் பண்ணையில் கோவில் உள்ளது என கூறி யுள்ளார். பிடிமண் கொண்டுவந்து பல்லடம் அருகே அமைந்துள்ள கோவிலில் வழிபாடு செய்து வந்தோம். பூர்வீகம் அறிந்துகொள்வதற்கு தங்களால் உதவமுடியுமா? கிளை, கொத்து விபரம் கூட தெரியாது தவிக்கிறேன். நன்றிகளுடன் - மாரிமுத்து (9865261909)

    ReplyDelete