Showing posts with label மறவர் வரலாறு. Show all posts
Showing posts with label மறவர் வரலாறு. Show all posts

Friday, June 3, 2016

தமிழ்ச் சமூகத்தில் மறவர் சாதி

                                                                             முனைவர் எஸ்.கதிர்வேல்

சொல்கதைகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் ‚ராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் 'தேவர்கள்' என்ற சிறப்புப் பெயர் பெற்றனர். எத்தனையோ காலமாக 'சேதுசமுத்திரம்' எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே 'சேதுபதி' மன்னர் என்ற பெயரும் பெற்றார்.

மேற்கண்ட இரு தகவல்களும் நமக்குச் சொல்வது என்னவெனில் ராமநாதபுரம் பகுதியே ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி. அங்கிருந்து புலம் பெயர்ந்தே இவர்கள் அருகிலிருந்த திருநெல்வேலிச்சீமை போன்ற பிற பகுதிகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்பதே. மறவர்கள் எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் தங்கள் தலைவர் எனும் மரியாதையை மன்னர் சேதுபதிக்கே அளித்து வந்தனர் என்பதை 'மறப்பாட்டு' சொல்கிறது. சண்டையிடும் இனமாக மறவர் பற்றிய முதல் குறிப்புகளைக் 'குல வம்சம்' தருகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பாண்டியர்களோடு மரபு உரிமை பற்றிய தகராறில் கொண்டையம்கோட்டை மறவர்கள் பங்கேற்றது பற்றியும் 'குலவம்சம்' பேசுகிறது. சேதுபதி மன்னரின் தலைமையின் கீழ் இருந்த மறவர்கள், மதுரை பாண்டிய மன்னனைச் சார்ந்தே இருந்ததாகவும் கூறப்படுகிறது.