Monday, January 4, 2021

தமிழக முதல்வர் எடப்பாடி அவர்களுடன் மறத்தமிழர் சேனை நிர்வாகிகள் சந்திப்பு.

 தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அனைத்து சமுதாய மக்களின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்து வருகிறார். அந்தவகையில் முக்குலத்தோர் சமுதாய மக்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை நேரில் கேட்பதற்காக 02.012021 அன்று மாலை 06.00 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தேவர் மகாலில் கூட்டம் நடைபெற்றது. 

 

கருத்துகேட்பு கூட்டத்திற்கு மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமை வகித்தார். அ.இ.அ.தி.மு.க இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி அவர்கள் வரவேற்று பேசினார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் மு.மணிகண்டன் அவர்கள் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் நி.சதன் பிரபாகர் அவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

மறத்தமிழர் சேனை சார்பாக மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன், மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆதி முத்துக்குமார பாண்டியன், மாநில இளைஞர் சேனை செயலாளர் சு.மணிகண்டன் தேவர், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் து.தினேஷ், மதுரை மாவட்ட தலைவர் ஆ.பாலமுருகன் தேவர், சென்னை மாவட்ட பொறுப்பாளர் ஸ்டான்லி ராஜபாண்டியன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் அரியூர் முத்துக்குமார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நினைவுப் பரிசாக இராமநாதபுரம் அரண்மனை போன்ற வடிவமைப்பை மறத்தமிழர் சேனை சார்பாக வழங்கினர். மாநில அமைப்பாளர் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்று கோரிக்கை மனுவை வழங்கினார்.

Sunday, October 9, 2016

கீழத்தூவல் வரலாற்று தடம்


     ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு தனித்த மணம் உண்டு. அதைப்போல  குணமும் உண்டு. அந்த மண்ணின் குணம் அதன் வரலாற்று  நிகழ்வுகளை உள்வாங்கி அங்கே வாழுகின்ற மக்களின் செயல்களிலே எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. மண்ணுக்கான அரசியலும் மண்ணுக்கான போராட்டமும் வாழக்கையாக கொண்ட தெற்கத்தி சீமையில் நவீன மன்னராட்சி அரசியல் முளைவிடத்துவங்கிய பத்தாவது ஆண்டின் நிறைவாக செலுத்தப்பட்ட போரானது முந்தைய போர்க்குடியினர்களை நோக்கியதாக இருந்தது. ஆட்சியும், ஆயுதமும் மாறியிருந்ததே தவிர மறவர்களின் உயிர்குடிக்கும் வேட்கை அம்மண்ணிடம் அப்படியே இருந்திருந்தது.

       பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் இரண்டுக்கும் நடுவில் இன்னமும் வெப்பம் குறையாமல் வறண்டு கிடக்கும் நிலமாக, கடந்து செல்லும் ஒவ்வொரு மனதையும் கடந்த காலத்தை நோக்கி இழுத்துச் செல்லும் அமைதியற்ற கிராமம்தான் கீழத்தூவல். இந்திய வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டிய அரசகொலையை சந்தித்து விட்டு இன்றளவும் அமைதியற்றவர்களாக அசைபோடுகிறார்கள் பழைய நிகழ்வுகளை... ஐம்பதுகளின் இறுதியில் காமராசரின் பொற்கால ஆட்சியில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து அப்பாவி இளைஞர்களின் குருதி வாடை இன்னமும் காற்றில் பரவிக்கிடக்கிறது. அரசியலுக்காக நிகழ்த்தப்பட்ட கொலைகளும், கலவரங்களும் அறுபது ஆண்டுகளைக் கடந்தும் அப்படியே மனித மனங்களில் இருந்து கொண்டிருப்பது காலம் வரைந்த துயரங்களிலே ஒன்றாகும். ஒரே நிலத்தில் வாழ்ந்து வந்த இரண்டு தமிழ்க்குடிகளை அரசியல் நலன்களுக்காக மோதவிட்டு, உயிர்குடித்த மனிதர்களின் செயல் விமர்சிக்கப்பட்டே வருகிறது.

Sunday, June 12, 2016

இராமநாதபுரம் அரண்மனை - இராமலிங்க விலாசம்


உலகப்புகழ் பெற்ற போர் மரபினர்களில் முதன்மையானவர்கள் மறவர்கள் ஆவர். போரெனில் புகழும் புனைகழல் மறவர் கூட்டமென்று புறநானூறு பாடியது. தனக்குதானே தந்தலை கொய்து மன்னவர் மண்காக்க உயிரைக் கொடையாக தந்து நடுகல் ஆகிப்போன வீரமறவர்கள் ஏராளம். மறத்தமிழர் சேனை வந்தால் மண் சிவக்கும், பகைவர் குருதி தெறிக்கும்; சென்ற இடமெல்லாம் செருக்களம் அமைத்து வெற்றியை மட்டுமே வென்ற இனமாகிப் போன மறவர்களில் ஒரு பிரிவினரான செம்பிய நாட்டு மறவர்கள் அரசாண்ட சீமையாம் பெரிய மறவர் நாட்டின் தலைநகராக முதலில் விரையாதகண்டன் என்கிற ஊரும், பின்பு புகழுர் என்கிற இன்றைய போகலூர் கிராமமும் இருந்து வந்திருக்கிறது.

கி.பி.1678 ஆம் ஆண்டு முதல் 1710 வரை அரசாண்ட ஏழாவது மன்னராகிய கிழவன் சேதுபதி என்று வரலாறு போற்றுகிற இரகுநாத சேதுபதி தன்னுடைய தலைநகரை இராமநாதபுரத்திற்கு மாற்றி பாண்டியர்கள் காலத்திலே கட்டப்பட்டு சிதைவடைந்திருந்த மண்கோட்டையை அகற்றிவிட்டு, செவ்வக வடிவில் பலமான கற்கோட்டையாக அரண்மனையை எழுப்பியிருக்கிறார்.

Friday, June 3, 2016

தமிழ்ச் சமூகத்தில் மறவர் சாதி

                                                                             முனைவர் எஸ்.கதிர்வேல்

சொல்கதைகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் ‚ராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் 'தேவர்கள்' என்ற சிறப்புப் பெயர் பெற்றனர். எத்தனையோ காலமாக 'சேதுசமுத்திரம்' எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே 'சேதுபதி' மன்னர் என்ற பெயரும் பெற்றார்.

மேற்கண்ட இரு தகவல்களும் நமக்குச் சொல்வது என்னவெனில் ராமநாதபுரம் பகுதியே ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி. அங்கிருந்து புலம் பெயர்ந்தே இவர்கள் அருகிலிருந்த திருநெல்வேலிச்சீமை போன்ற பிற பகுதிகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்பதே. மறவர்கள் எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் தங்கள் தலைவர் எனும் மரியாதையை மன்னர் சேதுபதிக்கே அளித்து வந்தனர் என்பதை 'மறப்பாட்டு' சொல்கிறது. சண்டையிடும் இனமாக மறவர் பற்றிய முதல் குறிப்புகளைக் 'குல வம்சம்' தருகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பாண்டியர்களோடு மரபு உரிமை பற்றிய தகராறில் கொண்டையம்கோட்டை மறவர்கள் பங்கேற்றது பற்றியும் 'குலவம்சம்' பேசுகிறது. சேதுபதி மன்னரின் தலைமையின் கீழ் இருந்த மறவர்கள், மதுரை பாண்டிய மன்னனைச் சார்ந்தே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மறவர் கிளைகள்

தமிழ் நிலத்தின் மிகப்பழமையான சாதிகளில் முதன்மையானது மறவர் சாதி என்பது உலக வரலாற்றில் எழுதப்பட்ட ஒன்றாகும். தென்பகுதிகளில் அடர்த்தியாக பரவி வாழக்கூடிய இச்சமூகத்தின் பண்பாடு, வழிபாடு, திருமண முறைகள் யாவும் சிறப்புக்குரியவைகள் ஆகும். முக்குலத்தோர் என பொதுவாக அழைக்கப்படும் கள்ளர், மறவர், அகமுடையார் சமூகங்களில் இரண்டிலும் இல்லாத ஓர் உயரிய அம்சமாக 'மறவர்களுக்கு மட்டும் கிளைகள்' என்கிற பகுப்புகள் உண்டு. 

மறவர்களின் ஆணிவேராக பாதுகாக்கப்படும் கிளைகள் குறித்த அறிதலற்ற பலரும் அதனை சிதைக்கவும், கலப்பு சாதியினராக மாற்றவும் துடிக்கின்றனர். கொத்து, கிளை, கரை ஆகிய உட்பிரிவுகளால் தான் மறவர் சாதி இன்னும் உயிர்ப்போடு இருப்பதாக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். அத்தகைய மறவர்களின் கிளைகளாக முந்தைய ஆய்வாளர்கள் தொகுத்துள்ள பட்டியல் கீழே பதிவிடப்படுகிறது. மேலும், மறத்தமிழர் சேனை சார்பில் விரைவில் திருத்தப்பட்ட முழுமையான மறவர் கிளைகளும், கொத்துகளும், மறவர்களின் வாழ்விடங்களும் ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்படும்.

( முந்தைய ஆய்வாளர்கள் தொகுத்தவை: மறத்தமிழர் சேனை தொகுத்தது அல்ல )

கொள்ளு

இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி. இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது. அதாவது, மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும். மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும். ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

முளைக்கட்டிய பயறு



பச்சை பயறு புரோட்டின் சத்து மிகுந்தது. அதை அப்படியே உபயோகிப்பதை விட, முளைக்கட்டி உபயோகித்தால் அதிக பலன் கிடைக்கும். முளைக்கட்டிய பயறில் வாயுத்தன்மை கிடையாது. எளிதில் சீரணமும் ஆகும்.

ஒரு கப் பச்சை பயிறை தண்ணீரில் குறைந்தது 12 மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி களைந்து எடுத்து, ஒரு மெல்லிய வெள்ளைத்துணியில் போட்டு, சிறு மூட்டை போல் முடிந்து, சற்று உயரமான இடத்தில் கட்டி மீண்டும் ஒரு 12 மணி நேரம் தொங்க விடவும். பின்னர் மூட்டையை அவிழ்த்துப் பார்த்தால் பயறு நன்றாக முளை விட்டிருக்கும். (குளிர் பிரதேசங்களில், பயறு முளை விட அதிக நேரமாகும். அந்த இடங்களில் வசிப்பவர்கள், மூடடையின் மேல் அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து விட்டு, மேலும் 10 அல்லது 12 மணி நேரம் வைத்திருக்கவும். அல்லது அந்த மூட்டையை, ஒரு பாத்திரத்திக்குள் வைத்து, மூடாமல் வைத்திருந்தாலும், முளை விடும்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றி உணின்.

முளைக்கட்டிய பயிறை அப்படியே பச்சையாக, சாலட், பச்சடி ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள், இட்லி தட்டில் போட்டு, ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து உபயோகிக்கலாம். மைக்ரோ அவனில் வேக வைத்து எடுக்கலாம்.

வெந்த பயறை கூட்டு, பொரியல் ஆகியவற்றில் சேர்க்கலாம். அல்லது விருப்பமான எந்த உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம்.