Sunday, October 9, 2016

கீழத்தூவல் வரலாற்று தடம்


     ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு தனித்த மணம் உண்டு. அதைப்போல  குணமும் உண்டு. அந்த மண்ணின் குணம் அதன் வரலாற்று  நிகழ்வுகளை உள்வாங்கி அங்கே வாழுகின்ற மக்களின் செயல்களிலே எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. மண்ணுக்கான அரசியலும் மண்ணுக்கான போராட்டமும் வாழக்கையாக கொண்ட தெற்கத்தி சீமையில் நவீன மன்னராட்சி அரசியல் முளைவிடத்துவங்கிய பத்தாவது ஆண்டின் நிறைவாக செலுத்தப்பட்ட போரானது முந்தைய போர்க்குடியினர்களை நோக்கியதாக இருந்தது. ஆட்சியும், ஆயுதமும் மாறியிருந்ததே தவிர மறவர்களின் உயிர்குடிக்கும் வேட்கை அம்மண்ணிடம் அப்படியே இருந்திருந்தது.

       பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் இரண்டுக்கும் நடுவில் இன்னமும் வெப்பம் குறையாமல் வறண்டு கிடக்கும் நிலமாக, கடந்து செல்லும் ஒவ்வொரு மனதையும் கடந்த காலத்தை நோக்கி இழுத்துச் செல்லும் அமைதியற்ற கிராமம்தான் கீழத்தூவல். இந்திய வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டிய அரசகொலையை சந்தித்து விட்டு இன்றளவும் அமைதியற்றவர்களாக அசைபோடுகிறார்கள் பழைய நிகழ்வுகளை... ஐம்பதுகளின் இறுதியில் காமராசரின் பொற்கால ஆட்சியில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து அப்பாவி இளைஞர்களின் குருதி வாடை இன்னமும் காற்றில் பரவிக்கிடக்கிறது. அரசியலுக்காக நிகழ்த்தப்பட்ட கொலைகளும், கலவரங்களும் அறுபது ஆண்டுகளைக் கடந்தும் அப்படியே மனித மனங்களில் இருந்து கொண்டிருப்பது காலம் வரைந்த துயரங்களிலே ஒன்றாகும். ஒரே நிலத்தில் வாழ்ந்து வந்த இரண்டு தமிழ்க்குடிகளை அரசியல் நலன்களுக்காக மோதவிட்டு, உயிர்குடித்த மனிதர்களின் செயல் விமர்சிக்கப்பட்டே வருகிறது.


       ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே பெரும்புகழ் படைத்த சமூகமாகவும், தனக்கு கீழான மக்களுக்கு பாதுகாப்பையும், சிறந்த நீதியையும் வழங்கும் வல்லமையுடன் அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் அத்தனையும் வியந்து போற்றிய மறக்குடி மக்கள் வாழும் சின்னஞ்சிறிய கிராமம் தான் கீழத்தூவல். போரும் போர் நிமித்தமான வாழ்வு முறையும் கொண்ட கொண்டையன்கோட்டை மறவர்கள் மிகுதியாக வாழ்ந்து வருகிறார்கள். ரோசத்திற்கும், மானத்திற்கும் கட்டுப்பட்ட மக்கள் இவர்களென வரலாறு பதிவு செய்துள்ளது.  


      இந்த இந்திய தேசமானது பலநூறு நாடுகளாக பிரிந்து பல்வேறு வகையான இனபிரிவினர்களால் அரசாட்சி கண்டு வந்த நிலையில். இம்மண்ணிற்கு அன்னியர்களான ஆங்கிலேயர்கள் தங்களது பிரித்தாலும் நடவடிக்கைகளால் இந்த தேசத்தை முழுமையாக அடிமைப்படுத்திய போது அதற்கு எதிராக கிளர்ந்த மக்களையும், மன்னர்களையும் மட்டப்படுத்துவதற்கு வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, தமிழகத்திலே வலுவாக இருந்த நீதிக்கட்சியை வீழ்த்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் தயவை நாடியது. மறவர்களின் மரபு வழி உணர்வுகளுக்கு நேரெதிரான கொள்கை உடையவர் பசும்பொன் திருமகனார். அனைத்து சமுதாயங்களையும் அரவணைத்து செல்லுகிற மனதிடமும், மேடையிலே உலக அரசியலை ஓங்கி ஒலிக்கும் அவரது ஞானமும் பரந்து விரிந்த இராமநாதபுரம் சீமை முழுவதும் காங்கிரஸை வளர்க்க பயன்பட்டது.

       நாடு சுதந்திரம் அடைய காங்கிரசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆங்கிலேயர்களுக்கு பாதகம் ஏற்பட்டுவிடாதபடியான மிதமான போக்கிலே இருப்பதைக் கண்டித்து வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் துவக்கிய அகில இந்திய முன்னேற்ற கட்சியின் தமிழகத் தலைவர் ஆன பசும்பொன் தேவர் திருமகனார் அவர்களது அரசியல் பாதையை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்ட கீழத்தூவல் தியாகிகள் ஐவரின் கதை இன்னும் பேசப்படாதது தமிழக வரலாற்று அறிதலின் ஞாபகமறதியை நமக்கு உணர்த்திச்செல்கிறது.

       1957 தேர்தலில் தேவர் இரட்டை தொகுதிகளிலும் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு, முதுகுளத்தூர் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிடுகிறார்.  இடைத்தேர்தல் வருகிறது தேவரின் சார்பாக சசிவர்ணதேவர் போட்டியிடுகிறார். ஆளும் காங்கிரஸ் கட்சி எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்கிற இலக்கோடு அரச இயந்திரம், அமைச்சர் பெருமக்கள் என அனைத்தையும் முடுக்கி விடுகிறது. செல்லும் இடமெல்லாம் தேவர் பெருமகனார் பெயரே ஓங்கி ஒலித்திட, சாதிசண்டைகளை ஏற்படுத்தியாவது தேவரின் வேட்பாளரை வெற்றி கொள்ள முயன்றதன் காரணமாக ஆங்காங்கே பிரச்சனைகளை தூண்டிவிடுகிறார்கள். ஆயினும் சசிவர்ண தேவர் அவர்கள் ஆளும்கட்சியை தோற்கடித்து வெற்றி கொள்கிறார்.


       தேர்தல் தோல்வி ஒரு பக்கம், அன்றைய பிரதமர் நேரு அவர்களையும் விட புகழ் பெற்ற தலைவரான நேதாஜி அவர்கள் மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைத்திட பாராளுமன்றத்தில் தொடர்ந்து முழங்கிய தேவர் திருமகனார் மறுபக்கம் என காங்கிரஸ் திண்டாடி வந்தது. இந்த தருணத்தில் முதுகுளத்தூர், அபிராமம் பகுதியில் தேர்தலால் ஏற்பட்டிருந்த சிறு சிறு கலவரங்களை சமரசப்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் சி.வி.ஆர்.பணிக்கர் தலைமையில் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

       பசும்பொன் தேவர் திருமகனாருக்கு முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சசிவர்ண தேவர் அவர்கள் தகவல் கொடுக்கவே தாமும் வந்துவிடுவதாக தகவல் சொல்ல மாவட்ட ஆட்சியரிடம் சொல்லப்பட்டுள்ளது. எனவே தேவர் வரும் வரை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு நடந்திருக்கிறது. பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சசிவர்ண தேவர், சிவகங்கை ராஜா, அருப்புக்கோட்டை டி.எஸ்.ராமசாமி, திருவாடானை கரியமாணிக்கம் அம்பலம் ஆகிய செல்வாக்கு பெற்றதலைவர்கள் கலந்து கொண்டனர்.

       காங்கிரஸ் கட்சி சார்பாக கமுதி செளந்திரபாண்டி நாடார், பேரையூர் வேலுச்சாமி நாடார், இராமநாதபுரம் மன்னரின் சகோதரர்கள் காசிநாத துரை, சிதம்பரநாத துரை, மேலத்தூவல் ராமுத்தேவர் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

       குறிப்பாக கம்யூனிஸ்டுகள் கலந்து கொள்ளவில்லை. தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளின் அடைப்படையில் இரட்டை வாக்குரிமை அளித்து வெற்றிபெற்ற தோப்புழாபட்டி ஏ.பெருமாள் அவர்களுக்கும் அரசுத்தரப்பு தகவல் சொல்லவில்லை. அப்படியிருக்க முதுகுளத்தூர் தொகுதிக்கே சம்பந்தமில்லாத பரமக்குடி தொகுதியை சார்ந்த இம்மானுவேலுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்ததா என்பதை ஆய்வாளர்கள் தெளிவுபடுத்திட வேண்டும்.

       மாவட்ட ஆட்சியர் பணிக்கர் தலைமையிலான ஆலோசனைகளின் இறுதியில் அனைத்து தலைவர்களும் ஒன்றாக அறிக்கை வெளியிடுவதென முடிவெடுக்கப்பட்டது. அந்த அறிக்கையில் யாரெல்லாம் கையெழுத்து இடுவது என விவாதம் வந்த பொழுது தேவரவர்கள் “ நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற வகையில் தானும், தாழ்த்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற வகையில் ஆர்.எஸ்.ஆறுமுகம் அவர்களும், சட்டமன்ற உறுப்பினர் என்கிற வகையில் சசிவர்ண தேவர் அவர்களும், தாழ்த்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் என்கிற வகையில் தோப்புழாபட்டி ஏ.பெருமாள் அவர்களும் கையெழுத்து போடட்டும்” என்று ஆலோசனை வழங்கியதும் மாவட்ட ஆட்சியரும் ஒத்துக்கொண்டார்கள்.

       அப்போது குறுக்கிட்ட பேரையூர் வேலுசாமி நாடார் அவர்கள் தோப்புழாபட்டி பெருமாள் அழைக்கப்படாததை சுட்டிக்காட்டி அவருக்கு பதிலாக தன்னோடு வந்துள்ள இம்மானுவேல் கையெழுத்திடட்டும் என்றார். உடனடியாக மறுத்த தேவர் திருமகனார் “இந்த தொகுதிக்கே சம்பந்தமில்லாத நபரை தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக நாங்கள் அங்கீகரித்தால், என்னை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்த தொகுதியின் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியான பெருமாள் அவர்களை அவமதித்தது போல ஆகிவிடும்”. ஆகவே இருப்பவர்கள் இப்போது கையெழுத்து இடலாம் இல்லாதவர்கள் வந்தவுடன் கையெழுத்து பெற்று பின்பு அறிக்கையாக வெளியிடுங்கள் என மாவட்ட ஆட்சியருக்கு ஆலோசனை கூறினார்.

       அப்போதே வேலுசாமி நாடாரால் பெரும்விவாதம் ஆக்கப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன. நண்பகலோடு தேவர் திருமகனார் முதுகுளத்தூர் ஆத்மநாத பிள்ளை வீட்டிற்கு உணவருந்த சென்றுவிட்டார். பேரையூர் பெருமாள் பீட்டர், இம்மானுவேல், பேரையூர் வேலுசாமி நாடார் ஆகியோர் பேரையூர் திரும்பி விட்டனர். பேரையூர் பெருமாள் பீட்டரும் இம்மானுவேலும் நெருங்கிய நண்பர்கள். 1954 களில் பரமக்குடியில் இருந்த புனித லுத்திரன் சபைக்கு பெருமாள் பீட்டர் தலைவராகவும், இம்மானுவேல் செயலாளராகவும் இருந்து வந்தனர். அன்றைய இரவு அனைவரும் பேரையூரில் தங்கிவிட்டனர். மறுநாள் செப்டம்பர்-11 அன்று பரமக்குடி வந்த இம்மானுவேலை ரயில் நிலையம் எதிரில் உள்ள ஆர்ச் அருகில் வைத்து படுகொலை செய்துவிட்டிருந்தனர்.

       இம்மானுவேல் படுகொலை செய்யபட்ட தகவல் கிடைத்ததும் பரமக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பரமக்குடி கிருஸ்தவ சபைக்கு சொந்தமான பொது இடுகாட்டில் புதைக்கப்பட்டார். பரமக்குடி மற்றும் அருகாமை பகுதிகளில் எவ்வித சலசலப்பும் இன்றி அமைதியாக இருந்த நிலையில் இரண்டு நாட்களாக மதுரை அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த அன்றைய முதல்வர் காமராஜர் சென்னை சென்று அமைச்சர்களோடு ஆலோசித்துவிட்டு இம்மானுவேல் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

       இம்மானுவேலின் சகோதரர் துரைராஜ் அவர்கள் காங்கிரஸ்காரர்களின் சதிக்கு எனது சகோதரர் பலி ஆகிவிட்டாரே என கதறியிருக்கிறார். இந்நிலையில், செப்டம்பர் 14 அன்று இன்ஸ்பெக்டர் ரே பெரும்படையோடு மேலத்தூவல் கிராமத்திற்குள் சென்று இம்மானுவேல் கொலை குறித்து விசாரிக்க வந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். அவர்கள் நாங்கள் சின்ன பார்ட்டி காங்கிரஸ் ஆட்கள். கீழத்தூவலில் இருப்பவர்கள் தான் பெரியபார்ட்டி பார்வர்ட் பிளாக்காரர்கள் எனவே அங்கே சென்று விசாரியுங்கள் என தெரிவிக்க பொழுது விடியும் காலை நேரத்தில் புழுதி பறக்க பெரும்படையோடு கீழத்தூவலுக்குள் தமது கொடூர திட்டத்தோடு உள்நுழைந்திருக்கிறார்.

       மொத்த கிராம மக்களையும் பள்ளிக்கூடத்திற்குள் தள்ளி உயிரும், உடலும் உள்ள மனிதர்களைத் தாக்குகிறோம் என்கிற மனதுஅற்றவர்களாக கொடுராமாக பெண்கள், குழந்தைகளை தாக்கிவிட்டு தங்களது கைகளில் இருந்த துருப்புச்சீட்டில் எழுதப்பட்டிருந்த பெயர்களை வாசிக்கத் தொடங்கினர். அவர்கள் தேடிவந்த நபர்கள் கிடைக்காத போதும், நல்ல திடகாத்திரமான உடல்வாகு கொண்ட ஐந்து இளைஞர்களை இழுத்துக்கொண்டு போய் கண்மாய் கரையில் வைத்துக்கொண்டு மிரட்ட துவங்கினர்.

       இந்த நாட்டின் சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டுமென நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அழைத்த போது எதைப்பற்றியும் கவலை கொள்ளாது தேவர் திருமகனார் அவர்களது வார்த்தைக்கு கட்டுப்பட்டு நாற்பதாயிரம் வீரமறவர்களை உயிர்க்கொடை தரச்செய்த இனத்தில் பிறந்ததைத் தவிர ஒரு பாவமும் அறியாத அந்த அப்பாவி இளைஞர்கள் ஐவரின் கைகளும் பின்புறமாக கட்டப்பட்டு, கண்களையும் துணிகொண்டு மறைத்து காக்காய் குருவிகளை சுடுவது போல, கக்கனின் கட்டுப்பாடுகளுக்கு கீழிருந்த காவல்துறை சுட்டுத் தள்ளியது. ஆங்கிலயன் டயர் பஞ்சாப்பில் நடத்திய ஜாலியன் வாலாபாக்கை விட ஆயிரம் மடங்கு கொடுமையானது சொந்த மண்ணில் சொந்த அரசால் சுட்டுக்கொல்லப்பட்டது.

       சுதந்திர இந்தியாவில் சொந்த அரசின் சுயநலனுக்காக உயிர்நீத்த மாவீரர்களாம் வ.தவசியாண்டித் தேவர், க.சிவமணித்தேவர், மு.சித்திரைவேலுத் தேவர், ரா.ஜெகநாதன் தேவர், மு.முத்துமணித் தேவர் ஆகிய ஐவரின் உடலும் மாலைவரை அங்கேயே மண்ணில் குருதி கலக்க அப்படியே கிடந்தனர். பள்ளிக்கூடத்திற்குள் அடைபட்டுக்கிடந்த பாமர மக்களுக்கோ “கூட்டிச்சென்ற பக்கம் குண்டு சத்தம் கேட்கிறதே. என்ன ஆகியிருக்கும், எத்தனை பேரை கொன்று இருப்பார்கள், நம்மில் இன்னும் எத்தனை பேரை கொல்லப் போகிறார்களோ?” என அஞ்சித்துடித்தனர்.

       மாலைவரை மேலதிகாரிகளின் உத்தரவிற்காக காத்துக்கிடந்த காவல்துறை இருட்டியதும் கிராமத்தில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த ஓலைப்பாய்களை எடுத்துவந்து ஐவரின் உடல்களையும் அவற்றில் கிடத்தி எடுத்துச்சென்றது. எடுத்துச்சென்ற ஐவரின் உடல்களை மீண்டும் அவர்களின் குடும்பத்திடமோ, மனைவியிடமோ வழங்காமல் அவர்களாகவே எரித்தோ, புதைத்தோ இல்லாமல் செய்துவிட்டனர்.

       இந்து மதத்தின் சமயக்கூறுகளின் மீது அழுத்தமான பற்று கொண்டவர்கள் தேவர்கள். பிறப்புக்காலந் தொட்டு மனிதன் இறக்கும் காலம் வரை ஒவ்வொன்றுக்கும் ஒரு சடங்கு முறைகளை கடைபிடிப்பதில் தீவிரமானவர்கள். இறந்த பின்பும்கூட இறந்தவர்களுக்காக செய்கிற ஈமச்சடங்குகள் மிக முக்கியமானவை. கொள்ளி வைத்தவனும் கொள்ளி குடம் உடைத்தவனும் இறந்தவரின் அனைத்துக்கும் வாரிசு ஆகிறான். ஆனால், அந்த உரிமையையும் கூட காமராஜரின் பொற்கால அரசு தமக்காக எடுத்துக்கொண்டது போல.

       கட்டியழ மனைவியிருந்தும், காடுவர மகனிருந்தும் கொள்ளிவைக்கக் கூட அம்மாவீரர்களின் உடல்களைக் கொடுக்காமல் போனது எதனால் என்று இன்றுவரை அறிவிக்காமல் போனது குறித்து எந்த ஆய்வாளர்களும் கவலை கொள்ளாதது விந்தை அளிக்கிறது.

       இந்த கொடூரகொலைகளுக்குள் ஒளிந்து கொண்டு பயன் அடைந்தவர்களை இன்று நாடறியும். பசும்பொன் தேவர் திருமகனாரின் அரசியல் வாழ்வை ஒழித்துவிடலாம் என்று கருதியவர்கள் முன்னிலையிலேயே இம்மானுவேல் கொலைக்கு தேவர் காரணமாக இருப்பார் என இம்மியளவும் கருத வாய்ப்பில்லை என நீதிமன்றம் தீர்ப்புரை வழங்கியது. மீண்டும் வந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வாக்கு கோராமலேயே வானளாவிய வெற்றியை அடைந்தார் தேவர்.

       தேவரது மரணத்திற்கு பிறகு நடந்த தேர்தலில் எளிய மாணவர் ஒருவரிடம் காமராசர் தோற்றுப்போனதும், மதுரை அரசு மருத்துவமனையில் கவனிப்பாரின்றி கக்கன் இறந்து போனதும் எதேச்சையானது அல்ல என்று அன்றைய மக்கள் முழங்கினார்கள்.  வரலாற்றின் திசையை மாற்றி அமைத்த எவ்வித சுவடுமில்லாமல் கண்மாய் கரையில் நடுகற்களாக நின்றுகொண்டிருக்கும் மாமறவர்கள் ஐவரையும் தேர்தல் பரப்புரைக்காக வந்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் வணங்கி மணிமண்டபம் கட்டுவதற்கான வாய்ப்புகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசிக்க சொல்லிவிட்டு போயிருக்கிறார்.


       காலமும் நீண்டுவிட்டது. ஆட்சிகளும் மாறிவிட்டது. எப்போதேனும் நீங்கள் அவ்வழி சென்றால் ஒரு ஐந்து நிமிடமாவது அந்த இடத்திற்கு சென்று வாருங்கள். அங்கே சொல்லப்படாத ஆயிரம் வரலாறுகளை அவைகள் சொல்லிக்கொண்டிருப்பதை நீங்களும் உணர்வீர்கள்.   தேவரினத்தின் கலங்கரைவிளக்கமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த நடுகற்கள், அறுபதாண்டு காலமாக எவ்வித அசைவுமின்றி காற்றில் தன் கடந்த காலத்தை சொல்லிக்கொண்டேயிருக்கிறது. 

நன்றி ; பூபாலனின் நவரசம் மாத இதழ்.
செப்-2016   

2 comments:

  1. வணக்கம் ஐயா தங்கள் பதிவுகளை ஒருசிலவற்றை வாசித்தேன் மிகவும் கருத்தாழமிக்க பதிவுகள்.

    ReplyDelete
  2. மிகவும் அருமையான செய்திகள்.. தெரியாதவற்றில் இதுவும் ஒன்று

    ReplyDelete