Sunday, October 9, 2016

கீழத்தூவல் வரலாற்று தடம்


     ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு தனித்த மணம் உண்டு. அதைப்போல  குணமும் உண்டு. அந்த மண்ணின் குணம் அதன் வரலாற்று  நிகழ்வுகளை உள்வாங்கி அங்கே வாழுகின்ற மக்களின் செயல்களிலே எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. மண்ணுக்கான அரசியலும் மண்ணுக்கான போராட்டமும் வாழக்கையாக கொண்ட தெற்கத்தி சீமையில் நவீன மன்னராட்சி அரசியல் முளைவிடத்துவங்கிய பத்தாவது ஆண்டின் நிறைவாக செலுத்தப்பட்ட போரானது முந்தைய போர்க்குடியினர்களை நோக்கியதாக இருந்தது. ஆட்சியும், ஆயுதமும் மாறியிருந்ததே தவிர மறவர்களின் உயிர்குடிக்கும் வேட்கை அம்மண்ணிடம் அப்படியே இருந்திருந்தது.

       பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் இரண்டுக்கும் நடுவில் இன்னமும் வெப்பம் குறையாமல் வறண்டு கிடக்கும் நிலமாக, கடந்து செல்லும் ஒவ்வொரு மனதையும் கடந்த காலத்தை நோக்கி இழுத்துச் செல்லும் அமைதியற்ற கிராமம்தான் கீழத்தூவல். இந்திய வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டிய அரசகொலையை சந்தித்து விட்டு இன்றளவும் அமைதியற்றவர்களாக அசைபோடுகிறார்கள் பழைய நிகழ்வுகளை... ஐம்பதுகளின் இறுதியில் காமராசரின் பொற்கால ஆட்சியில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து அப்பாவி இளைஞர்களின் குருதி வாடை இன்னமும் காற்றில் பரவிக்கிடக்கிறது. அரசியலுக்காக நிகழ்த்தப்பட்ட கொலைகளும், கலவரங்களும் அறுபது ஆண்டுகளைக் கடந்தும் அப்படியே மனித மனங்களில் இருந்து கொண்டிருப்பது காலம் வரைந்த துயரங்களிலே ஒன்றாகும். ஒரே நிலத்தில் வாழ்ந்து வந்த இரண்டு தமிழ்க்குடிகளை அரசியல் நலன்களுக்காக மோதவிட்டு, உயிர்குடித்த மனிதர்களின் செயல் விமர்சிக்கப்பட்டே வருகிறது.