Sunday, June 12, 2016

இராமநாதபுரம் அரண்மனை - இராமலிங்க விலாசம்


உலகப்புகழ் பெற்ற போர் மரபினர்களில் முதன்மையானவர்கள் மறவர்கள் ஆவர். போரெனில் புகழும் புனைகழல் மறவர் கூட்டமென்று புறநானூறு பாடியது. தனக்குதானே தந்தலை கொய்து மன்னவர் மண்காக்க உயிரைக் கொடையாக தந்து நடுகல் ஆகிப்போன வீரமறவர்கள் ஏராளம். மறத்தமிழர் சேனை வந்தால் மண் சிவக்கும், பகைவர் குருதி தெறிக்கும்; சென்ற இடமெல்லாம் செருக்களம் அமைத்து வெற்றியை மட்டுமே வென்ற இனமாகிப் போன மறவர்களில் ஒரு பிரிவினரான செம்பிய நாட்டு மறவர்கள் அரசாண்ட சீமையாம் பெரிய மறவர் நாட்டின் தலைநகராக முதலில் விரையாதகண்டன் என்கிற ஊரும், பின்பு புகழுர் என்கிற இன்றைய போகலூர் கிராமமும் இருந்து வந்திருக்கிறது.

கி.பி.1678 ஆம் ஆண்டு முதல் 1710 வரை அரசாண்ட ஏழாவது மன்னராகிய கிழவன் சேதுபதி என்று வரலாறு போற்றுகிற இரகுநாத சேதுபதி தன்னுடைய தலைநகரை இராமநாதபுரத்திற்கு மாற்றி பாண்டியர்கள் காலத்திலே கட்டப்பட்டு சிதைவடைந்திருந்த மண்கோட்டையை அகற்றிவிட்டு, செவ்வக வடிவில் பலமான கற்கோட்டையாக அரண்மனையை எழுப்பியிருக்கிறார்.


 அரண்மனைக்குள் விருந்தினர் மாளிகை, அரசவை ஆகியவைகளும் இடம்பெற்றிருக்கின்றன. நிறைந்த ஞானமும், உயர்ந்த தெய்வ பக்தியும் மிக்கவர்களாக சேது நாட்டிற்கு அதிபதியாக திகழ்ந்ததன் விளைவாக சேதுபதிகள் என அழைக்கப் பட்டிருக்கின்றனர். அதனைப் போலவே தமது கொடைத்திறத்தாலே மிகச் சிறந்த கட்டிடக்கலையை வார்த்து இராமேஸ்வரம் கோவிலை உலகப் புகழ் பெற்ற ஆலயமாக உருவாக்கி தந்திருக்கிறார்கள். இராமன் வழிபட்ட இராமலிங்கத்தை நினைவு கூறும் வகையில் தாங்கள் அரசாண்ட அரண்மனைக்கு இராமலிங்க விலாசம் என பெயரிட்டுள்ளனர்.

மறத்தமிழர் சேனையின் சார்பாக அரண்மனையின் மகத்துவங்களை அறிவதற்காக குழுவாக சென்ற போது அதன் பழமையும், கம்பீரமும், வரலாறும், இன்றைய தொல்லியல் துறையின் அலட்சியமும் அறிய முடிந்தது. உயர்ந்து நிற்கும் மதில் சுவர்களும், வர்ணம் சிதைந்த நிலையிலும் வசமாகும் ஓவிய அழகியல்களும் மெய்மறக்கச் செய்யும் அற்புத அதிசயங்கள் எனலாம்.

கிழவன் சேதுபதிக்குப் பிறகு ஒன்பது மறவர் மன்னர்கள் தன்னுரிமை பெற்ற அரசர்களாக 1772 ஆம் ஆண்டு வரை அரசாட்சி செய்துள்ளனர். அதன்பிறகு ஆங்கிலேயர்கள் வசமாகியிருக்கிறது. 1803 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரையிலும் ஒன்பது சேதுபதி மன்னர்கள் ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்தின் கீழ் ஜமீந்தார்களாக இருந்திருக்கிறார்கள். 1978 வரை சேதுபதிகள் வசமிருந்த இராமலிங்க விலாசம் தமிழக அரசின் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருந்து வருகிறது.

இந்திய அரச பரம்பரையினர்களையும், அவர்களது அரண்மனைகளையும் ஆய்வு செய்கிறபோது அந்நிய ஆட்சியாளர்களுக்கு அடிபணியாமல் வணங்காமுடியாக வாழ்ந்த மன்னர்களின் வாழ்வும், வாழ்விடமும் அழிக்கப்பட்டதும், சிதைக்கப்பட்டதும் தான் முதன்மையாக இருக்கிறது. ஆங்கிலேயர் உள்ளிட்ட அந்நிய துர்சக்திகளுக்கு உடந்தையாகிப் போனவர்களின் அரண்மனைகளே சிதைவடையாமல் இன்று காட்சிப் பொருளாக நிற்கிறது. இவையெல்லாம் அவமானச் சின்னங்களாக அன்றைய மக்களால் பார்க்கப்பட்டவைகள்; சபிக்கப்பட்டவைகள்.

இராமநாதபுரம் மறவர் சீமையில் கிழவன் சேதுபதியால் கட்டப்பட்ட கற்கோட்டையானது 2 மைல் சுற்றளவு கொண்டதாக இருந்திருக்கிறது. மரணத்திற்கு அஞ்சாத மாமறவர், மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களை கைது செய்து சிறைபடுத்திய ஆங்கிலேய கொடுங்கோல அரசு 1803 ஆண்டு இடித்து தள்ளியது. தரைமட்டமாக்கப்பட்ட அன்றைய கோட்டையின் அடையாளமாக, வான்புகழ் மன்னவர் கிழவன் சேதுபதி அவர்களின் படைபலம் பேசும் மூலக்கொத்தளம் ஒன்றுதான் எஞ்சி நிற்கிறது. இந்த மூலக்கொத்தளத்தில் தான் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கெட்டி பொம்மு நாயக்கர் சேதுபதியின் விருந்தினராக தங்கி சென்றதாக வரலாறு சொல்கிறது. மீதமிருக்கும் கலைப் பொக்கிஷம் இராமலிங்க விலாசமும், குமரன் சேதுபதி குடும்பத்தினர் தங்கியிருக்கும் அரண்மனையும் தான்.

சேது நாட்டின் மண்மானம் பேசுகிற இராமலிங்க விலாசம் மாளிகைக்கு முன்பு ஆலய கோபுரத்தையும் தாண்டிய கலைப்பெட்டகமாக நுழைவு வாயில் கட்டிடமும், உள்ளே திறந்த வெளி முற்றமும், கிழக்கு நோக்கிய உயர்வான மேடையும் இரண்டு முகப்பு தூண்களும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. தரையில் இருந்து மண்டபத்திற்குள் ஏற 16 நீண்ட படிகள் அப்போது அமைக்கப்பட்டனவாம், தற்போது மண்மூடி ஒன்பது படிகள் மட்டுமே தெரிகின்றன. இம்மாளிகை கிழக்கு மேற்காக 153 அடி நீளமும் வடக்கு தெற்காக 65 அடி அகலமும் கொண்ட 14 அடி உயர செவ்வக மேடையின் மீது கருங்கல், செங்கல், சுண்ணாம்பு ஆகியவற்றைக் கலந்து கட்டப்பட்டு இருக்கிறது. உள்ளே மேற்கூரை முழுவதும் இயற்கை நிறங்களைக் கொண்ட வரலாற்று நிகழ்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை 18 ஆம் நூற்றாண்டுகளில் வரையப்பட்டவைகள் என்கிறார்கள். கோவில் கட்டிட அமைப்பைப் போன்று உள் மண்டபங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

 உள்ளே முதல் மண்டபத்தில் வட்டத்தூண்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் மேலே அரைவட்ட வளைவுகள் தூண்களை இணைக்கின்றன. இவைகள் மதுரை திருமலை நாயக்கர் மகாலை நினைவூட்டும் வகையில் இருப்பதாகவும், தெற்கு, வடக்கு திசைகளில் பக்கவாட்டு வாயில்களும், தென்மேற்கு மூலையில் சேதுபதிகளின் பட்டாபிசேக மேடை அமைந்திருப்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகிறது.

மகாமண்டபத்தின் மேற்கே ஐந்து படிகள் ஏறினால் உள்மண்டபம் வருகிறது. கருங்கற் தூண்கள் தாங்கி நிற்க சுவரின் தெற்கு, மேற்கு உச்சியில் ஒன்பது சேதுபதிகள் மன்னர்களின் சிலைகள் இருக்கின்றன. இவைகள் உடையான் சேதுபதி என்கிற சடைக்கன் சேதுபதி முதல் முத்துவிசய ரகுநாத சேதுபதி வரையிலான மன்னர்களின் சிலைகளாகும்.

இராமலிங்க விலாசத்தின் மகாமண்டபத்தில் கிழக்குப்பக்க சுவரில் தஞ்சை மராட்டிய மன்னருக்கும் சேதுபதி மன்னருக்கும் இடையே நடைபெற்ற போரினை ஓவியமாக வரைந்துள்ளனர். மேலும், தென் சுவரில் சேதுபதி தன் மனைவியோடு இருத்தல், வெளிநாட்டினரை சந்திப்பது, நகர் வலம் வருதல் போன்றவைகளும், வடக்கு பக்க சுவரில் திருமாலின் பத்து அவதார பிறப்பு ஓவியங்களும் தனித்தனியாக வரையப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் 1713 ஆண்டு முதல் 1725 வரை இராமநாதபுரம் மண்ணை அரசாண்ட முத்துவிசய ரகுநாத சேதுபதி மன்னரின் காலத்தில் வரையப்படிருக்கலாம் என்றும் ஓவியங்களில் இருப்பது அவரது தோற்றமாக இருக்கலாம் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.


இராமாயணக்காட்சிகள், நகர் உலா, மது குடித்தல், மன்மதன் ரதியாக மன்னவரும் ராணியும் அம்பு விடுதல், நீராடல், புலவர் ஆதரித்தல் என பலவகையான ஓவிய பொக்கிஷங்களை பாதுகாக்க எவ்வித முயற்சியும் எடுக்கப்படாமல் இருந்து வருவது தமிழர் கலை அழிப்பின் முகமே. இவற்றையெல்லாம் ஆவணப்படுத்த அரசு முன்வருவதோடு.....  தமிழையும், தமிழ்ப்புலவர்களையும் ஆதரித்து வளர்த்த பெருமையோடு தொடர் போர் நடத்தி வெற்றிக்கொண்ட ஒரே அரசாகிய இராமநாதபுரம் அரசர்களின் புகழை யாவரும் அறிந்து கொள்ளும் வகையில் ஒலி, ஒளிக்காட்சிகளை அரங்கேற்றலாம்.

சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவிற்கு அனுப்பி இந்து மதத்தின் உயர்வுகளை உலகளவில் பரவச்செய்த பாஸ்கர சேதுபதி மன்னர் அரசாண்ட அவை இது. 1798-இல் வெள்ளை கலெக்டர் ஜாக்சனுக்கும் கெட்டி பொம்மு நாயக்கருக்கும் மோதல் நடந்த நிகழ்வும் இங்குதான் நடந்திருக்கிறது. இங்குள்ள சுரங்கப்பாதை இன்றும் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறதாம். ஆக வீரம் மட்டுமல்ல சேதுபதிகளின் அடையாளம். கலைப்படைப்புகளும் தான். உலக அழகியலின் தொட்டிலாக விளங்கும் மறவர் சீமையின் இராமலிங்க விலாசத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வது நம் கடமை.

No comments:

Post a Comment